×

திருச்சி திருவானைக்காவல் கோயில் தேரோட்டம் கோலாகலம்!: தேரை வடம் பிடித்து இழுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவை ஒட்டி நடைபெற்ற தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா  கடந்த மாதம் 11ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் ஏப்ரல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி  எட்டுத்திக்கு கொடியேற்றம் கடந்த 28ம் தேதி நடைபெற்றது.

அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். நேற்று இரவு தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வர உள்ளனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்கென இன்று அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 4.30 மணியளவில் உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருளினர். காலை 6.30 மணியளவில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்டலம் 1 குழுத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், 3வது கவுன்சிலர் ராதாமணி மற்றும் அதிகாரிகள், பிரமுகர்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

திருவானைக்காவலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் தனித்தனியே இரண்டு பெரிய தேர் உண்டு என்பதும், அவை இரண்டும், ஒரேநாளில் அடுத்தடுத்து வடம்பிடிக்கப்பட்டு வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக  காலை 5 மணியளவில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேர்கள் வலம் வந்து நிலை சேர்ந்தபின், பிரதான தேர்கள் வடம்பிடிக்கப்ட்டது. தேரோட்டத்தையொட்டி 2 பெரிய தேர்களையும் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.  தேரோட்டத்தின் போது தேரை உடனடியாக நிறுத்த வசதியாகவும், விபத்தை தவிர்க்கும் வகையிலும், அம்மன் தேருக்கு ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டது.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தன. மேலும் உள்ளூர் வியாபாரிகள் தண்ணீர்பந்தல், அன்னதானம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள் செய்து இருந்தனர்.

Tags : Thiruvanikawal Temple ,Tiruvanikawal Temple ,Tadha North , Trichy Thiruvanaikaval Temple, Therottam, Vadam, Devotees
× RELATED திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை